|
"அம்மா... எனக்கு சென்னையில நல்ல சம்பளத்துல வேலை கிடைச்சிருக்கு..." என்கிற சந்தோஷத்துடன் தன் ஊரில் இருந்து தலைநகரம் கிளம்பும் இளம் பெண்ணுக்கு, கூடவே சென்னையில் பாதுகாப்பாக தங்குவது குறித்த கவலையும் எழும். சொந்தக்காரர்கள் வீடு அங்கு இருந்தாலும், நீண்ட நாட்கள் தங்குவது 'உறவுகள் தொடர்கதை'யாக இல்லாமல் 'தொல்லைக் கதை'யாக மாறிவிடும் என்கிற அச்சத்தால்... அதைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம். கடைசியாக, கைகொடுப்பது தனியார் நடத்தும் 'வொர்க்கிங் உமன் ஹாஸ்டல்'தான்.
பெரும்பாலும், ஏதாவது ஒரு ஒடுக்கமான வீடு; குறுகலான அபார்ட்மென்ட் என்று போதுமான வசதிகள் இல்லாத இடங்களில்தான் இத்தகைய ஹாஸ்டல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவர்களில் பலரும் வாங்கும் கட்டணமோ... வயிற்றில் புளியைக் கரைக்கும். சில பல ஆயிரங்களை செலவழித்தால்தான் நல்ல சாப்பாடு.. கொஞ்சம் வசதியான அறை... இதெல்லாம் கிடைக்கும். பெரும்பாலான ஹாஸ்டல்களில் ஒரே அறையில் 7, 8 பேர்கூட தங்கியிருக்க வேண்டிய நெருக்கடி.
இதுபோன்ற காரணங்களால் 4, 5 பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து வீடு எடுத்துத் தங்குகிறார்கள். அதிலும் பாதுகாப்பும் சமூக அணுகுமுறைகளும் பெரும் பிரச்னைகளாக இருக்கின்றன.
இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் பலரின் வயிற்றில் பாலைவார்க்கும் விதமாக, தமிழக அரசின் சமூக நலத்துறை, பணிபுரியும் பெண்களுக்கான விடுதியை சென்னை, சாலிகிராமம், குமரன் வீதியில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டியிருக்கிறது.
"இந்த விடுதியில் 30 அறைகள் உள்ளன. அறைக்கு 2 பேர் என 60 பேர் இதில் தங்கிக் கொள்ளலாம். நல்ல தண்ணீர் வசதியுடன் அட்டாச்டு பாத்ரூம்கள் இருக்கின்றன. இங்கு தங்கும் பெண்கள், அரசு சாரா தொண்டு நிறுவனம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து ஒரு கமிட்டியை அமைப்பார்கள். அதுதான் இந்த விடுதியை நிர்வாகிக்கும். எனவே, நிர்வாகத்திலும் பிரச்னைகள் இல்லாமல் பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம். விரைவில், இதே வளாகத்தில் இன்னும் ஒரு கட்டடத்தை கட்ட உள்ளோம். சென்னைக்கு வேலைக்காக வரும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்காகவே இதைச் செய்திருக்கிறோம். திறப்பு விழா முடிந்துவிட்டது. விரைவிலேயே இது பயன்பாட்டுக்கு வரும்" என்று சொன்னார் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.
"தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமிருக்கும் கிழக்கு கடற்கரை சாலையிலும் இதேபோல் விடுதிகளைக் கட்டினால் இன்னும் நிறைய பெண்கள் பயன் பெறுவார்களே" என்று நாம் சொல்ல...
" 'அவள் விகடன்' எடுத்து சொல்லியிருக்கு இல்லியா..? கண்டிப்பா பரீசீலிப்போம்!" என்றார் புன்னகையுடன்.
நன்றி விகடன்..
|